இலங்கையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள்! பதற்றத்தில் கொழும்பு
இலங்கை காலி முகத்திடல் கடற்கரையில் இளைஞர்களின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
இலங்கை வரலாறு கண்டிராத அளவிற்கு மக்களின் எழுச்சி நடந்தது. மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே போராட்டத்தை ஒடுக்க உத்தரவிட்டார்.
ஜூலை 22ஆம் திகதி காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்களின் குடில்கள் அகற்றப்பட்டன. மேலும் போராட்ட முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் திகதி அன்று, காலி முகத்திடல் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. ஆனால் அவரைப் பற்றிய விவரம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதன் பின்னர் 29ஆம் திகதி அன்று இன்னொரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
நேற்று முன் தினம் காலி முகத்திடலில் மற்றோரு இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே வாரத்தில் மூன்று இளைஞர்களின் சடலங்கள் கரை ஒதுங்கி இருப்பது கொழும்புவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.