இந்திய அணியில் இவர் ஒருவர் தான் எங்களுக்கு பிரச்சனை! தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் வெளிப்படை
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஆன டீன் எல்கர், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவால் தான் தங்களை மிரட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஆன டீன் எல்கர் கூறுகையில், இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா மிகச் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய பந்து வீச்சாளர்களில் இவர் ஒருவரால் தான் எங்களை மிரட்ட முடியும் என்று நம்புகிறோம். ஏனெனில், அவர் அந்தளவிற்கு துல்லியமாக பந்து வீசி வருகிறார்.
இருப்பினும் அவர் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு நாங்கள் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி பந்து வீச்சு யூனிட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்திய அணி கடைசி இரண்டு மூன்று வருடங்களில் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. வெளிநாட்டு மண்ணில் அவர்கள் பெற்ற வெற்றியே அதற்குச் சான்று, இந்திய அணியின் அனுபவ வீரர் அஷ்வின் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவர் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார்.