பிரித்தானியாவில் மீண்டும் உச்சம் தொட்ட தினசரி இறப்பு எண்ணிக்கை: ஸ்தம்பிக்கும் NHS
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 379 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் பதிவாகும் மிக உயர்ந்த இறப்பு எண்ணிக்கை இதுவாகும். மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் 218,724 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலயில், சிகிச்சை பலனின்றி 48 பேர்கள் மரணமடைந்திருந்தனர்.
இதனையடுத்து பிரித்தானியாவில் இதுவரையான கொரோனா இறப்பு எண்ணிக்கை 150,000 தொட்டது என்ற துயரமான தகவல் வெளியானது. மேலும், உலக நாடுகளில் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா மற்றும் பெரு நாடுகளுக்கு அடுத்து 7வதாக பிரித்தானியாவும் இணைந்துகொண்டது.
இதனிடையே, சமீபத்திய கொரோனா அலை லண்டனில் உச்சத்தை எட்டியதாகத் தோன்றினாலும், இங்கிலாந்தின் பிற பகுதிகளில் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதே கருத்தையே பேராசிரியர் Dame Anne Johnson முன்வைத்துள்ளார். லண்டனைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது என்றார்.
இதனிடையே, இதுவரை 25 NHS அமைப்புகள் தங்களால் மேலும் அழுத்தம் தாங்க முடியாது என அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் சுகாதாரத்துறை கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக, புதிய நோயாளிகளை கவனிக்க முடியாத சூழல் எழுந்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.