பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: வழக்கில் முக்கிய திருப்பம்
பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதி
பிரித்தானியர்களான ஆண்ட்ரூ (Andrew Searle, 62) மற்றும் டான் (Dawn Searle, 56) தம்பதியர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தெற்கு பிரான்சிலுள்ள Les Pesquiès என்னுமிடத்தில் அமைந்துள்ள தங்கள் இரண்டாவது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் 6ஆம் திகதியன்று, தம்பதியர் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கிடப்பது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், கொள்ளையர்கள் யாரோ அவர்களை கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால், பின்னர் பொலிசாரின் சந்தேகம் ஆண்ட்ரூ மீதே திரும்பியது.
அதாவது, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஆண்ட்ரூ டானைக் கொலை செய்திருக்கலாம் என்றும், தப்புவதற்காக, கொள்ளையர்கள் அவரை கொலை செய்ததுபோல காட்ட முயன்றிருக்கலாம் என்றும் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து டானைத் தாக்கியிருந்தால் அவர் சத்தமிட்டிருப்பார். அது அவரது வீட்டுக்கு அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.
அதுவும், அவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. ஆக, தோட்டத்தில் ஏதாவது நடந்திருந்தால் நிச்சயம் மற்ற வீடுகளுக்கு சத்தம் கேட்டிருக்கும்.
ஆகவே, அவர் தோட்டத்தில் கொல்லப்படவில்லை, வீட்டுக்குள் வைத்து கொல்லப்பட்டு, அவரது உடல் தோட்டத்தில் கொண்டு போடப்பட்டுள்ளது.
பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது, ஆண்ட்ரூ கொள்ளை நடந்தது போல காட்டுவதற்காக பொருட்களை ஆங்காங்கு வீசியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், கணவன் மனைவிக்கிடையிலான சண்டையில் டான் கொல்லப்பட, அதை மறைக்க கொள்ளை முயற்சி நடந்ததுபோல காட்ட ஆண்ட்ரூ முயன்றிருக்கலாம் என்றும், பின்னர் மனம் மாறி, தானே தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுவதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது ஆண்ட்ரூ தன் மனைவியான டானை கொலை செய்துவிட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார் என்னும் ரீதியில் வழக்கு விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |