பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு: ஆனால்... இதுதான் அரசியல்
பிரித்தானிய மக்களிடையேயும், வாக்காளர்களிடையேயும் பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு ஆதரவு குறைந்துவருகிறது. பிரித்தானிய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதை நிரூபணம் செய்கின்றன. ஆனால்...
மக்கள் தலைவிதி
சில நாடுகளில், நீண்ட காலமாக இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்வதை கவனிக்க முடியும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும். கொஞ்சம் காலத்துக்குப் பிறகு கட்சியினர் ஊழல் செய்வார்கள், மக்கள் பணத்தை சாப்பிடுவார்கள். ஆகவே, அடுத்த தேர்தலில் மக்கள் எதிர்க்காட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள். தோற்ற கட்சி அதிகம் அலட்டிக் கொள்ளாது. ஏனென்றால், அடுத்து அவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள்.
அதற்குக் காரணம், ஆட்சியில் இல்லாத காலத்தில் அவர்கள் திருந்திவிட்டார்கள், ஊழலை கைவிட்டுவிட்டார்கள் என்பது அல்ல. நாட்டை ஆள இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை. வாக்களிக்க, மக்களுக்கு வேறு கட்சியோ, தகுதியான தலைவரோ இல்லை. புதிதாக வருபவர்களுக்கு ஒரு நாட்டை அளும் அளவுக்கு அனுபவம் வர வெகு காலமாகும். ஆக, இவர்களே மாறி மாறி நாட்டை ஆள்வார்கள். மக்கள், தலைவிதி என எண்ணிக்கொண்டு இவர்களில் ஒருவருக்கு வாக்களிப்பார்கள். அரசு சக்கரம் இயங்கவேண்டுமே!
பிரதமர் ரிஷிக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு
சமீபத்தில், சில பிரித்தானிய ஆய்வமைப்புகள், மக்கள் ஆதரவு எந்த அரசியல்வாதிக்கு என்பதை அறிய ஆய்வொன்றை மேற்கொண்டன.
அந்த ஆய்வுகளில், 2019இல் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தவர்களில் 42 சதவிகிதத்தினர் பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு ஆதரவாக உள்ளதும், 29 சதவிகிதத்தினர் எதிராக உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆனால், மொத்த பொதுமக்களிடையே எந்த அரசியல்வாதிக்கு ஆதரவு அதிகம் என்று பார்த்தால், சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஏனென்றால், பொதுமக்களில் 53 சதவிகிதம்பேர் பிரதமர் ரிஷிக்கு எதிராக உள்ளார்கள். 24 சதவிகிதம்பேர்தான் அவருக்கு ஆதரவாக உள்ளார்கள்.
ஆனால்...
இப்படிப்பட்ட சூழலில்தான் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சிலரே, ரிஷி பதவி விலகவேண்டும். அவர் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார்கள்.
ஆனால், ஆய்வுகளில் மற்றொரு விடயம் தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. அதாவது, மேலே கூறியதுபோல, இப்போதைக்கு, ரிஷியை விட்டால், கன்சர்வேட்டிவ் கட்சியை நடத்த வேறு சரியான ஆள் இல்லை.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்காக கடும் போட்டி நடந்ததும், ரிஷியை புறக்கணித்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் லிஸ் ட்ரஸ் என்னும் பெண் அரசியல்வாதியை கட்சித் தலைவராக தெர்ந்தெடுத்ததும் நினைவிருக்கலாம்.
ஆனால் என்ன நடந்தது? லிஸ் ட்ரஸ்ஸால் நாட்டை ஆள முடியவில்லை. வேறு வழியில்லாமல், கன்சர்வேட்டிவ் கட்சியினர் ரிஷியை கட்சித் தலைவராக தேர்வு செய்ய, அவர் பிரித்தானிய பிரதமரானார்.
ஆக, ரிஷிக்கு ஆதரவு குறைந்துள்ளது என்றாலும், கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்த வேறு பொருத்தமான ஆள் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில், அடுத்து மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலே சொன்னதுபோல வேறு வழியில்லாமல் கன்சர்வேட்டிவ் கட்சியையே தேர்ந்தெடுப்பார்களா? அப்படி அக்கட்சி வெற்றி பெற்றால் யார் பிரதமராவார்? அல்லது 2010க்குப் பிறகு ஆட்சிக்கே வராத லிபரல் கட்சியைத் தேர்ந்தெடுப்பார்களா? அப்படி அக்கட்சி வெற்றி பெற்றால் யார் பிரதமராவார் என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |