அழுகிய நிலையில்... கொத்தாக மீட்கப்பட்ட 31 சடலங்கள்: வெளியான அதிர்ச்சி பின்னணி
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் அமைந்துள்ள இறுதி சடங்கு இல்லம் ஒன்றில் அழுகிய நிலையில் 31 சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் மாகாண பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இண்டியானா மாகாணத்தில் லூயிஸ்வில்லி புறநகர்ப் பகுதியான ஜெபர்சன்வில்லி பகுதி பொலிசார் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் லாங்க்ஃபோர்ட் இறுதி சடங்கு இல்லத்தில் இருந்து 31 சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் சில சடலங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் உடற்கூராய்வாளர் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, மீட்கப்பட்ட சடலங்களில் சில கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே, குறித்த இறுதி சடங்கு இல்லத்தில் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன், எரியூட்டப்பட்ட நிலையில் 16 பேர்களின் சடலங்களும் கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய இறுதி சடங்கு இல்லத்தின் உரிமையாளரிடம் வெள்ளிக்கிழமையில் இருந்தே பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிக்காக அருகாமையில் உள்ள மாவட்டத்தின் உடற்கூராய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தமது சகோதரரின் உடலை இறுதி சடங்குகளுக்காக குறித்த இலத்தில் ஒப்படைத்த பெண் ஒருவர், தற்போதுவரையில் காத்திருப்பதாக கூறியுள்ளது விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாரா ஓவன் என்ற அந்த பெண்மணி, தொடர்புடைய இல்லத்தை பலமுறை தொடர்பு கொண்டும், இறுதியில் தாமதமாகும் என அவர்கள் தெரிவித்ததாக தாரா ஓவன் குறிப்பிட்டுள்ளார்.