குறைந்து வரும் கொரோனா தடுப்பூசிகளின் திறன்... என்ன செய்வது? நிபுணர்கள் ஆலோசனை
Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து, கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாக்கும் திறன் பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அறிவியல் ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பெறுவது, கொரோனா தொற்றியவர்களை தீவிரமான கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பது உண்மைதான் என்றாலும், கொரோனா தொற்றைத் தடுக்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது என்கிறார் ஒன்ராறியோ மாகாண அறிவியல் ஆலோசனைக்குழுவின் இயக்குநரான Dr. Peter Jüni.
ஒரு மாதத்திற்கு முன் சுமார் 90 சதவிகிதம் பாதுகாப்பை அளித்த இரண்டு டோஸ் தடுப்பூசிகள், தற்போது 14.9 சதவிகித பாதுகாப்பையே அளிப்பதாக சமீபத்தில் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசியின் பாதுகாப்புத்திறன் சூரியனைக் கண்ட பனி போல் உருகி வருகிறது என்று கூறியுள்ள Jüni, Omicron வைரஸ், நோயெதிர்ப்பு மண்டலத்துக்குள்ளேயே ஊடுருவி வருகிறது என்கிறார்.
அது, இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர், தடுப்பூசியே பெறாதவர் என்றெல்லாம் பார்க்காமல் சகட்டுமேனிக்கு தொற்றி வருகிறது என்றார்.
இத்ற்கிடையில், பிரித்தானியாவிலிருந்து கிடைத்துள்ள தரவுகள், மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்றும் அபாயத்தை ஐந்து மடங்கு குறைக்கலாம் என காட்டியுள்ளதாக தெரிவிக்கும் Jüni, மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதை வேகப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், தடுப்பூசிகளின் திறன் குறைந்துகொண்டே வந்தாலும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சைப்பிரிவை சென்றடைவதற்கும் எதிராக, 90 சதவிகிதத்திற்கு அதிகமாக, தொடர்ந்து பாதுகாத்து வருகிறது என்பதையும் சமீபத்திய தரவுகள் தெரிவித்துள்ளன.
ஆக, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சைப்பிரிவை சென்றடைவதற்கும் எதிராக பாதுகாத்து வரும் நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசி, கொரோனா தொற்றும் அபாயத்தை குறைப்பது தெரியவந்துள்ளதால், மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அறிவியலாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.