சுவிட்சர்லாந்துக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்யும் ரஷ்யா: பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர், சுவிட்சர்லாந்தைக் குறிவைத்து ரஷ்யா பொய்ப்பிரச்சாரங்களைப் பரப்பிவருவது அதிகரித்துவருவதாக எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்துக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம்
சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை, ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பு மீதான நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக, மாஸ்கோ பொய்ப்பிரச்சாரங்களைப் பயன்படுத்துகிறது என்று சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான மார்ட்டின் (Martin Pfister) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஒருங்கிணைந்த சமூக ஊடக பிரச்சாரங்களையும், ரஷ்ய ஊடகங்களால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் மேற்கோள் காட்டிய மார்ட்டின் இவ்வாறு கூறியுள்ளார்.
வலுவான மற்றும் சுதந்திரமான ஊடகம் என்பது தற்போது சுவிட்சர்லாந்தின் தேசிய பாதுகாப்பின் முக்கிய பகுதியாகும் என்றும் மார்ட்டின் கூறியுள்ளார்.
ஜெனீவாவில் சமீபத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றை உதாரணமாக காட்டியுள்ள மார்ட்டின், அந்த வீடியோ, பல ரஷ்ய ஆதரவு சமூக ஊடகங்களால் மறுஇடுகை செய்யப்பட்டது என்றும், சுவிட்சர்லாந்தில் குழப்பம் அதிகரித்துவருவதாக போலியான தோற்றத்தை உருவாக்குவதற்காக அந்த வீடியோ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா டுடே மற்றும் Pravda போன்ற ரஷ்ய இணையதளங்கள், சுவிட்சர்லாந்தைக் குறித்து ஒரு மாதத்திற்கு 900 கட்டுரைகளை வெளியிடுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |