மொத்தமாக சரணடைந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்: பழி தீர்த்த தவான்
அனுபவ வீரர் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது.
இதனையடுத்து டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அன்ரிச் நோர்ஜே வீச, வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அதன்பின் வந்த கேன் வில்லியம்சன்(18), சகா(18), மணிஷ் பாண்டே(17) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 74 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் தத்தளித்தது. அதனையடுத்து வந்த அப்துல் சமாத் 21 பந்தில் 28 ஓட்டங்களும், ரஷித் கான் 19 பந்தில் 21 ஓட்டங்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 11 ஓட்டங்களில் அவுட்டானாலும், ஷிகர் தவான் 37 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து பக்காவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இதன் மூலம் 422 ஓட்டங்களுடன் ஐபிஎல் தொடரில் மீண்டும் 'ஆரஞ்சு கேப்'-ஐ கைப்பற்றினார் தவான். ஆனால், இவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், காயத்துக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 47 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 35 ஓட்டங்களும் குவித்து 17.5வது ஓவரிலேயே அணியை வெற்றிப் பெற வைத்தனர்.
இதன் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.