வீட்டில் பள்ளம் தோண்டும்போது தங்கம் கிடைத்ததாக கூறிய நபர்கள்: தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தங்கள் வீட்டின் பின்னால் கிடைத்த தங்கம் எனக்கூறி டெல்லி தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றிய நபர்களை பொலிசார் வலைவீசித் தேடிவருகிறார்கள்.
வீட்டில் பள்ளம் தோண்டும்போது கிடைத்த தங்கம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி, ரமேஷ் ஷர்மா என்பவர், கௌரவ் சோனி என்னும் தொழிலதிபரிடம், பாபுலால், லக்ஷ்மி மற்றும் மோகன்ராய் என்னும் மூவரை அறிமுகம் செய்துள்ளார்.
அவர்கள், தங்கள் வீட்டின் பின்னால் பள்ளம் தோண்டும்போது இரண்டு தங்க உருண்டைகள் தங்களுக்குக் கிடைத்ததாக சோனியிடம் கூறியுள்ளார்கள். அந்த தங்கத்தை வாங்கிய சோனி அதை பரிசோதிக்க, அது 78 சதவிகிதம் சுத்தத் தங்கம் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
சில நாட்களுக்குப் பின், சுமார் 2 கிலோ எடையுள்ள ஒரு தங்க நெக்லசை அதே கூட்டம் சோனியிடம் கொண்டுவந்துள்ளது. அதன் விலை 80 லட்ச ரூபாய் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஏற்கனவே அவர்கள் சுத்தமான தங்க உருண்டைகளை விற்றதால் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டிருந்ததால், அந்த நெக்லசை வாங்கிக்கொண்ட சோனி, முதலில் அவர்களுக்கு 30 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு, தங்கத்தை சோதித்துவிட்டு மீதிப் பணத்தைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
தங்க நெக்லசைக் கொண்டு சென்ற சோனி அதை பரிசோதிக்க, அது போலி நகை என்பது தெரியவந்துள்ளது.
நகை விற்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றால், அவர்கள் எல்லோருடைய மொபைல்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவே, பொலிசில் புகாரளித்துள்ளார் சோனி.
அவர்களை தீவிரமாக தேடிவந்த பொலிசார், ஒரு மொபைல் எண்ணை வைத்து இம்மாதம் 3ஆம் திகதி மோகன்ராயைப் பிடித்துவிட்டார்கள்.
விசாரணையில் மோசடி குறித்து ஒப்புக்கொண்ட மோகன்ராய், தனது கூட்டாளிகள் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக தனக்கு 9.5 லட்ச ரூபாய் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
பாபுலால் மற்றும் லக்ஷ்மியை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |