200 மீட்டர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்! பதறவைக்கும் வீடியோ
இந்திய தலைநகர் டெல்லியில், ஷாலிமார் பாக் பகுதியில் ஸ்கூட்டியில் வந்த கொள்ளையர்கள் ஒரு பெண்ணை 200 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் சென்ற பெண்ணிடம் செல்போனை பறிக்கும் முயற்சியில் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் ஸ்கூட்டிக்கு பின்னால் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றனர்.
டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
அதிர்ச்சியூட்டும் அந்த காட்சியில், இரண்டு கொள்ளையர்கள் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு சாலையின் தவறான பக்கத்தை கடப்பது தெரிகிறது.
ஸ்கூட்டரின் பின் இருக்கையில் இருந்த திருடன் ஒரு பெண்ணைப் பிடித்து இழுத்து வருவதும், பின்னர் நடுரோட்டில் வீசிச் செல்வதைக் காணலாம்.
சாலையில் படுத்திருந்த பெண்ணுக்கு உதவி செய்ய அருகில் இருந்தவர்கள் ஓடினர், மேலும் சலசலப்பைக் கண்டு வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
அந்தப் பெண் ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணிபுரிகிறார். அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.