ஏடிஎம் கொள்ளைகள்: பொலிசார் ஒருவர் கைது
ஃபரிதாபாத் நகரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பில் பொலிசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்தில், சமீபத்தில், இரண்டு ஏடிஎம் இயந்திரங்களிருந்து 12 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 லட்ச ரூபாய் கொள்ளை
ஜூலை மாதம் 3ஆம் திகதி, ஏடிஎம் இயந்திரம் ஒன்றை மின் கருவி ஒன்றின் உதவியுடன் வெட்டி அதிலிருந்த 6.53 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஜூலை மாதம் 26ஆம் திகதி, அதே பகுதியிலுள்ள மற்றொரு ஏடிஎம்மிலிருந்து 5.71 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், நேற்றும், நேற்று முன்தினமும் ஹுக்கம் சந்த் (34), அவரது உறவினரான அர்விந்த் (26), விகாஸ் குமார் (24), அபிஷேக் (19) மற்றும் விஷால் குமார் (19) ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ஹுக்கம் சந்த், 2016ஆம் ஆண்டு முதல் டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவருகிறார்.
கடன் தொல்லையால் அவதியுற்றுவந்த ஹுக்கம், தன் உறவினரான அர்விந்த் உதவியுடன் ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
எந்த ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பாதுகாவலர்கள் இருக்கமாட்டார்கள், எங்கு கொள்ளையடிப்பது எளிது என திட்டமிட்ட ஹுக்கம், வெல்டிங் வேலை செய்யும் தன் உறவினர்கள் உதவியுடன் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி 12 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளை கைது செய்துள்ள அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |