மும்பையின் பிளே ஆப்புக்கு காத்திருக்கும் கடும் சவால்! டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி
மும்பை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்கள் எடுத்தார். இப்போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ்கான் 4 ஓவர் வீசி 15 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்களான ஷிகார் தாவான், பொல்லார்ட்டின் ரன் அவுட்டால் 8 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து ப்ரித்வி ஷா 6 ஓட்டங்கள், ஸ்டீவ் ஸ்மித் 9 ஓட்டங்களிலும் என வந்த வேகத்தில் பவுலியன் திரும்பியதால், ரிஷப் பாண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி மும்பையின் பந்து வீச்சை நிதானமாக எதிர் கொண்டது.
இதனால் டெல்லி அணியின் ரன் விகிதமும் சீரான வேகத்தில் சென்றது. அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பாண்ட் 26 ஓட்டங்களில் வெளியேற, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது.
இருப்பினும், தனி ஒருவனாக ஷ்ரேயாஸ் அய்யர் போராடிக் கொண்டிருக்க, இறுதியில் டெல்லி அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தன்னுடைய பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் டெல்லி அணி 9 வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி ஜெயிக்க வேண்டும், அப்படி வெற்றி பெற்றாலும், சமயம் பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அதையும் உறுதி செய்ய முடியும்.