தலைகீழாக கவிழ்ந்து விபத்து... ரொறன்ரோ விமான விபத்து தொடர்பில் புதிய தகவல்
80 பேர்களுடன் பயணப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரொறன்ரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.
காயங்களுடன் தப்பிய
அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானமானது தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியதாகவும் குறைந்தது 18 பேர் காயமடைந்ததாகவும், ஆனால் உயிரிழப்பேதும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவின் மிகப்பெரிய பெருநகரத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் 76 பயணிகளும் நான்கு பணியாளர்களும் தரையிறங்கிய டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவிக்கையில், 18 பேர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், ஒரு குழந்தை, 60 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 40 வயதுடைய ஒரு பெண் ஆகிய மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
லேசான காயங்களுடன் தப்பியவர்கள் உட்பட காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகொப்டர் மூலமாக, அப்பகுதி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசர மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சமூக ஊடக பக்கங்களில் வெளியான காணொளிகளில், தலைகீழாக கவிழ்ந்த விமானத்தில் இருந்து மக்கள் தடுமாறித் தப்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
பெரிய பனிப்புயல்
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கனடாவை பெரிய பனிப்புயல் ஒன்று தாக்கியது. ரொறன்ரோவில் திங்கட்கிழமையும் பலத்த காற்று மற்றும் உறைய வைக்கும் வெப்பநிலையும் உணரப்படலாம்.
புயல் காரணமாக வார இறுதி நாட்களில் ரத்து செய்யப்பட்ட விமானங்களை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் விமானங்களைச் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சுமார் 1,000 விமானங்களில் 130,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க இருப்பதாக ரொறன்ரோ விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இதனிடையே, விமான விபத்தை அடுத்து நான்கு டசினுக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 80 பேர்கள் பயணித்ததை பெடரல் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் நடந்த விபத்து குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |