ஒருவேளை உணவுக்காக 6 மணி நேர பயணம்... இலங்கையில் பரிதவிக்கும் மக்கள்
இலங்கை மக்கள் 1948க்கு பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் உணவுத்தட்டுப்பாடு உச்சம் கண்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, 70% மக்கள் ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் பசியுடன் இருப்பதாகவும் ஐந்தில் ஒருவர் ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் உணவைத் தவற விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கொழும்பில் சமூக சமையலறைகளை ஆர்வலர்கள் திறந்து ஒவ்வொரு நாளும் 250 பேர்களுக்கு உணவளிக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
மேபல் சில்வா என்பவர் தெரிவிக்கையில், இந்த பொருளாதார நெருக்கடி நிலைக்கு முன்னர் தமது மகன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஆனால் தற்போது வேலை இல்லாததால் உணவு, மருந்து உள்ளிட்ட செலவுகளுக்கு பணமின்றி பரிதவிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் ஊனமுற்றவர்கள் மட்டுமின்றி மேபல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சக்கர நாற்காலியில் பயணிக்கும் மேபல் மற்றும் அவரது குடும்பத்தினர் நாளுக்கும் 6 மைல்கள் தொலைவு நடந்து சென்று இலவச உணவு பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் மருந்துக்கே பணமில்லை பேருந்துக்கு செலவிட முடியாத நிலை எனவும் மேபல் தெரிவித்துள்ளார். இதனிடையே, தொண்டு நிறுவனம் ஒன்று ஏழை மக்களுக்காக ஜூன் மாதத்தில் உணவு விநியோகத்தை தொடங்கியது.
ஆனால் தற்போது உணவுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10 சமூக சமையலறைகளை திறந்து, நாள் தோறும் 1,500 பேர்களுக்கு உனவளித்து வருகின்றனர்.
தொண்டு நிறுவன இயக்குனர் மோசஸ் ஆகாஷ் தெரிவிக்கையில், எமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் நிச்சயம் காரணம் என்றார்.