உலகின் மிகக் கடுமையான ஊரடங்கு விதிகள் இங்கே தான்: களத்தில் ஹெலிகொப்டர், ராணுவம்
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிகளை மிக தீவிரமாக அமுலுக்கு கொண்டு வந்துள்ள அவுஸ்திரேலியா, ஹெலிகொப்டர் மற்றும் ராணுவத்தையும் களத்தில் இறக்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரிதமாக செயல்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. உள்ளூர் ஊரடங்கு விதிகள் அமுலில் இருந்த போதும் பல நாடுகள் சர்வதேச பயணிகளை அனுமதித்தது.
ஆனால் அவுஸ்திரேலியா எல்லைகளை மூடியதுடன், சொந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் சிக்கியிருந்தும், அவர்கள் நாடு திரும்ப குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே வழங்கியதுடன், பலர் நாட்டில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு விதிகளை கடுமையாக்கியது.
இதனால் அவுஸ்திரேலியாவில் குடியிருக்கும் பிரித்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பலர், தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது மீண்டும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை கடுமையாக்கியுள்ள அவுஸ்திரேலியா ஹெலிகொப்டர் மற்றும் ராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளது.
இதனால் கொரோனா இல்லாத அவுஸ்திரேலியாவை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு 265 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.
மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரையில் எல்லைகள் மூடப்பட்டிருக்கும் என்றே அவுஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக இதுவரை 17% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில் சிட்னியில் 1,300 பொலிசாரை குவித்துள்ளனர்.
மட்டுமின்றி, சுமார் 300 ஆயுததாரிகள் அல்லாத ராணுவத்தினர் ஒவ்வொரு குடியிருப்பாக சென்று, பாதிக்கப்பட்டவர்கள், சோதனை செய்து கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர்களை நேரடியாக சென்று உறுதிப்படுத்தியும் வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அவுஸ்திரேலியாவின் துரித நடவடிக்கையானது பல நாடுகளாலும் பாராட்டப்படுகிறது.
இதுவரை 34,000 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் 1,000 பேர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.