பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தவர்களை சுமந்து செல்ல இருந்த விமானம்: கடைசி நிமிடத்தில் ரத்து?
பிரித்தானியாவிலிருந்து ஈராக்குக்கு நாடுகடத்தப்பட இருந்த குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களை சுமந்துகொண்டு புறப்பட இருந்த விமானம் ஒன்று, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக The New Arab பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஈராக் நாடாளுமன்றத்திலுள்ள குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகடத்தல் விவகாரம் தொடர்பாக ஈராக் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினரான Arian Taugozi என்பவர், தான் பத்துக்கும் மேற்பட்ட குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் பேசியதாகவும், தங்களுடைய விமானத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலக அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் பிரித்தானிய காவல் மையம் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், விமானம் ரத்து செய்யப்பட்டாலும், பிரித்தானிய உள்துறைச் செயலகத்தின் முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இந்த செய்தி பிரபல பிரித்தானிய ஊடகங்கள் எதிலும் வெளியாகவில்லை. எனவே, இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை.