பிரித்தானியாவில் ஸ்தம்பித்த மருத்துவமனை: விடுக்கப்பட்ட அவசர உதவி கோரிக்கை
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், டெரிஃபோர்ட் மருத்துவமனை ஸ்தம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெவன், பிளைமவுத் பகுதியில் அமைந்துள்ள டெரிஃபோர்ட் மருத்துவமனையே கொரோனா நோயாளிகளால் ஸ்தம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
51 நோயாளிகள் தற்போது குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாகவும், மூன்றாவது அலையில் இது மிகப்பெரிய எண்ணிக்கை எனவும், அடுத்த வாரம் இதே நேரம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வேறு நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஆனால் உரிய மருந்துகளை வழங்கக்கூடிய ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக அவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. ஊழியர்கள் பெரும்பாலும் பணி நேரத்திற்கும் மேலதிகமாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுவதாகவும், டெல்டா மாறுபாடு காரணமாக பல மருத்துவமனைகளில் இதே நிலை நீடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் 130 பேர்கள் மருத்துவர்களை சந்திக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஊழியர் பற்றாக்குறை காரணமாகவும் சிகிச்சையளிக்க முடியாமல் ஸ்தம்பிக்கும் இரண்டாவது மருத்துவமனை இது.
முன்னதாக, நோர்போக், கிரேட் யர்மவுத்தில் உள்ள ஜேம்ஸ் பேஜெட் பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் ஸ்தம்பித்துள்ளதாக அறிவித்திருந்தது.
மார்ச் முதல் கொரோனா இறப்புகள் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி கடந்த வாரம் மட்டும் 571 பேர்களின் இறப்பு சான்றிதழில் கொரோனா பாதிப்பால் மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 149 பேர்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாகவும், புதிதாக 35,847 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.