தண்ணீருக்கடியில் பயணிக்கும் ட்ரோன் மூலம் பிரித்தானியாவை வரைபடத்திலேயே இல்லாதபடி அழித்து விடுவோம்: ரஷ்ய தொலைக்காட்சி மிரட்டல்
தண்ணீருக்கடியில் பயணிக்கும் ட்ரோனைக் கொண்டு தாக்கி, பிரித்தானியாவை வரைபடத்திலேயே இல்லாதபடி அழித்து விடுவோம் என ரஷ்ய தொலைக்காட்சி மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
புடினுடைய வாய் (mouthpiece) என அழைக்கப்படும் ரஷ்ய தொலைக்காட்சி பிரபலமான Dmitry Kiselyov என்பவர், தனது ஞாயிறு இரவு நிகழ்ச்சியின்போது, பிரித்தானியாவை Poseidon என்னும் தண்ணீருக்கடியில் பயணிக்கும் ட்ரோனைக் கொண்டு தாக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். .
அந்த ட்ரோன் மூலம் வெடிக்கச் செய்யப்படும் அணுகுண்டு, 1,600 அடி சுற்றளவுக்கு கதிரியக்க அலைகளை உண்டாக்கும் என்றும், பிரித்தானியா கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்டு விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அப்படி ஒரு அணுகுண்டு பிரித்தானியாவைத் தாக்கினால் என்ன ஆகும் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ள Dmitry, தண்ணீருக்கடியில் பயணிக்கும் தங்கள் ட்ரோன், 100 மெகாடன் அளவுக்கு வெடிப்பொருட்களை சுமந்து செல்லக்கூடியது என்று, அது வெடித்தால், 1.640 அடி உயரத்துக்கு ஒரு பெரிய சுனாமி எழும்பி பிரித்தானியாவையே காணாமல் போகச் செய்துவிடும் என்றும் மிரட்டியுள்ளார்.
அந்த அணுமுண்டு வெடித்தால் உருவாகும் பயங்கர கதிரியக்கம், மிச்சம் மீதி இருக்கும் பிரித்தானிய நிலப்பரப்பை யாரும் பயன்படுத்த முடியாத கதிரியக்கப் பாலைவனமாக மாற்றி விடும் என்றும் கூறியுள்ளார் அவர்.
அத்துடன், பிரித்தானியத் தீவு ஒரு சிறிய தீவு என்றும், தங்களிடம் இருக்கும் சாத்தான் 2 என்னும் Sarmat 2 ஏவுகணையின் ஒரு தாக்குதல் அந்த தீவை அழித்துவிடும் என்றும் கூறியுள்ள Dmitry, ’ஒரு தாக்குதல் போரிஸ், அப்புறம் இங்கிலாந்து என்று ஒரு நாடு இருக்கவே இருக்காது’ என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே, ரஷ்ய அரசு தொலைக்காட்சி பிரித்தானியாவை அணுகுண்டு வீசி அழித்துவிடுவதாக மிரட்டி வருகிறது.
நேட்டோ அமைப்பைக் கலந்தாலோசிக்காமலே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக, நடக்காத ஒன்றை நடந்ததாக தவறான செய்தி வெளியிட்டு வருகிறது ரஷ்ய தொலைக்காட்சி.
ஆனால், உண்மையில், பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாலும், மற்ற ஐரோப்பிய நாடுகளை முந்திக்கொண்டு உக்ரைனுக்கு பிரித்தானியா ஆயுதங்கள் வழங்கியது, மற்றும் இரண்டு முறை போரிஸ் ஜான்சன் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் உக்ரைனுக்குச் சென்று வந்தது ஆகிய விடயங்களே ரஷ்யாவை எரிச்சலடையச் செய்துள்ளன.
அதன் விளைவாகவே, இல்லாததை எல்லாம் சொல்லி, பிரித்தானியாவை மிரட்டி வருகிறது ரஷ்யா.