உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து: இனி 2 விமானிகள் கட்டாயம்: டிஜிசிஏ புதிய உத்தரவு
Dgca ordered all helicopters must have 2 pilots : உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து இனி விமானங்களில் இரண்டு விமானிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து
உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலமான பத்ரிநாத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் 5 பக்தர்கள் மற்றும் ஒரு விமானியுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து சாமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெலிகாப்டர் ஆனது விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவத்தில் 5 பக்தர்கள், ஒரு விமானி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.
புதிய விதிகள் அமுல்
பத்ரிநாத் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து சார் தாம் யாத்திரை வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து சார்ட்டர் ஹெலிகாப்டர்களில் இனி 2 விமானிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு விமான பயணத்திற்கான சேருமிடம் மற்றும் வழித்தடத்திற்கான முன் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது உத்தரகாண்ட் சிவில் ஏவியேஷன் டெவலப்மென்ட் அத்தாரிட்டியுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தில் உள்ள இரண்டாவது விமானியும் மலைபாதையில் விமானத்தை இயக்குவதற்கான தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஹெலிகாப்டரும் தரையிறங்கிய பிறகு வழித்தட வானிலை மற்றும் செயல்பாட்டு முறைகளை விமானிகள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் எனவும், இவை அடுத்து புறப்படும் விமானிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் நவம்பர் 2ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதோடு, தற்போது உள்ள கட்டண அமைப்பில் இந்த விதிமுறைகளை அமுல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என கூறி 11 விமான சேவை நிறுவனங்கள் நவம்பர் 2ம் திகதி முதல் தங்களது சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.