இந்திய விமானங்களில் பவர் பேங்க்கிற்கு தடை விதிக்க திட்டம் - என்ன காரணம்?
இந்திய விமானங்களில் பவர் பேங்க் பயன்பாட்டிற்கு தடை விதிக்க DGCA பரிசீலித்து வருகிறது.
பவர் பேங்க்கிற்கு தடை விதிக்க திட்டம்
விமானத்தில் பயணம் செய்யும் போது, பாதுகாப்பு கருதி சில பொருட்களை கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.
இந்த பட்டியலில், மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்ய பயன்படுத்தும் பவர் பேங்க் பயன்பாட்டிற்கும் இந்திய விமானங்களில் தடை விதிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பரிசீலித்து வருகிறது.

கடந்த 19ஆம் திகதி, டெல்லியில் இருந்து நாகாலாந்தின் திமாபூருக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில், பயணி ஒருவரின் இருக்கைக்கு பின்புறத்தில் வைத்திருந்த பவர் பேங்க்கால் சிறிய அளவில் தீ பற்றியது. உடனடியாக விமான பணியாளர்கள் தீயை அணைத்தனர்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில், விமானத்தின் உட்புறம் இது போன்ற பவர் பேங்க்கால் தீ பற்றியது. ஆனால் யாருக்கும் எந்த காயமும் இல்லை.
இதனை தொடர்ந்து, விமானத்தில் பவர் பேங்க் பயன்பாடு குறித்து DGCA மதிப்பாய்வு செய்து வருகிறது.
இதில், இந்தியாவில் விமானத்தில் பவர்பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது தடை விதிக்கவோ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அக்டோபர் 1 ஆம் திகதி முதல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதன் அனைத்து விமானங்களிலும் பவர் பேங்க்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.
பயணிகள் இப்போது 100 watt-hoursக்கு குறைவான பவர் பேங்க்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் அவற்றை சார்ஜ் செய்யவோ அல்லது விமானத்தில் அதன் மூலம் மொபைல் சாதனங்களுக்கு சார்ஜ் வழங்குவதற்கோ தடைசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் விமான பயணத்தின் போது, பவர் பேங்க் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |