நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் முக்கிய தீர்ப்பு
வேலையில்லா பட்டதாரி படம் தொடர்பில் நடிகர் தனுஷ் மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014ம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் வேலையில்லா பட்டதாரி.
இந்த படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான அமைப்பு புகார் கொடுத்தது.
இதன் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இருவரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் கடந்த மார்ச் 29ம் தேதி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மீதான புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே விதிமுறைகள் பொருந்தும் என வாதிட்டார்.
மேலும் படத்திற்கு முறையான தணிக்கை சான்றிதழ் பெற்றே வெளியிடப்பட்டதாகவும், புகார் அளிப்பதற்கு முன்பாக விளக்கம் அளிக்க எந்தவொரு வாய்ப்பும் வழங்கவில்லை எனவும் வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |