அரசியல் பணிகளை தீவிரப்படுத்தும் தனுஷ் - சட்டமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை
கோவையில், சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் தனுஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றி தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலுக்கு வருவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதே போல் நடிகர் தனுஷும் அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
சமீபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தனுஷ், "இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது.
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்" என பேசியிருந்தார்.
இது அரசியலுக்கு ரசிகர்களை தயார் செய்யும் பேச்சு என விவாதம் எழுந்த நிலையில், தற்போது சட்டமன்ற தொகுதி வாரியாக நற்பணி இயக்கம் தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நமது அன்புத் தலைவர் தனுஷ் அவர்களின் கோவை & கோவை தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகள் - விவரங்கள் !
— RAJA B RAJA (@B_RAJA_) August 10, 2026
Thalaivar @dhanushkraja , #OM @coimbatore_DFC @Covaidhanushfc pic.twitter.com/nXdvYo0RVg
இது குறித்து அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு மாவட்டம் மற்றும் கோவை வடக்கு மாவட்டம் கீழ் உள்ள தலா 5 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவரை தொடர்பு கொள்ளுமாறு’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகுவார் என கணித்த அவரது ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேல், "நான் தனுஷின் ஜாதகத்தை பர்சனலா பார்த்திருக்கேன்.
உறுதியாக இன்னொரு அதிர்ஷடமிகு ஆள் தனுஷ். ரிஸ்க் எடுக்க தனுஷ் சார் தயாரா இருந்தா 2031ல இது விஜய் சார் வெர்சஸ் தனுஷ் சார்ன்னு மாறும்" என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |