டோனி உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கிற்கு முன் வர இது தான் உண்மையான காரணம்! ரகசியத்தை உடைத்த முரளிதரன்
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டோனி முன்னே இறங்க இதுவே முக்கிய காரணம் என்று இப்போது கூறியுள்ளார்.
இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால், 2011-ஆம் ஆண்டை மட்டும் மறக்கவே முடியாது. அந்த ஆண்டில் தான் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
1983-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா பெற்ற இரண்டாவது உலகக்கோப்பை இதுவாகும்.
இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில், யுவராஜ் சிங் இறங்கும் 5-வது இடத்தில் திடீரென்று டோனி களம் கண்டார்.
இது இந்திய ரசிகர்கள் பலருக்கும் அப்போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் டோனி களத்தில் கடைசி வரை நின்று 91 ஓட்டங்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
போட்டி முடிந்த பின்பு டோனி முரளிதரன் பந்து வீச்சை எதிர்கொள்வதற்காகவே யுவராஜ் நிறுத்தப்பட்டு, தான் களத்தில் இறங்கியதாக கூறினார்.
இந்நிலையில், தற்போது இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான இஎஸ்பின்கிரிக்ன்போவிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு நான் ஆடி வந்ததால், டோனிக்கு என்னுடைய பந்து வீச்சை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. பயிற்சியில் நான் பந்து வீசும் போது, குறிப்பாக தூஸ்ரா பந்துகளை எப்படி ஆடுவது என்பதை எளிதாக புரிந்து கொண்டார்.
அதுவே யுவராஜ் என்கிற போது, கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே டோனி முன்னதாக இறங்கியிருக்கலாம், அது அவருக்கு கை கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.