நான் எடுத்த தவறான முடிவு தான் காரணம்! ஒப்புக்கொண்ட தோனி
முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது தவறான முடிவு என குஜராத் அணியுடனான தோல்வி குறித்து பேசிய தோனி தெரிவித்துள்ளார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தோனி, முதலில் துடுப்பாட்டம் செய்வதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ஜெகதீசன் சென்னை அணியில் விளையாடினார். அவர் 33 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
போட்டி முடிந்ததும் பேசிய சென்னை அணித்தலைவர் தோனி கூறுகையில், 'முதலில் துடுப்பாட்டம் செய்யும் முடிவு சரியான ஒன்று அல்ல. முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம், அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதும் கடினமாக இருந்தது. சாய் கிஷோர் சிறப்பாக பந்துவீசினார்.
ஜெகதீசனுக்கு முன்பே ஷிவம் தூபேவை களமிறக்கி இருக்கலாம். ஆனால், ஜெகதீசனை கொண்டு வந்ததற்கான நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கும். நாங்கள் ஒரு நல்ல playing XI-ஐ உருவாக்க முயற்சித்து வருகிறோம், வரும் போட்டிகளில் அதையே செய்வோம்' என தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.