சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? எவ்வாறு சாப்பிட வேண்டும்! நன்மைகள் என்னென்ன!
கோடை என்றால் சுட்டெரிக்கும் வெயில் மட்டும் இல்லாமல், மாம்பழங்களும் அனைவரின் நினைவுக்கு வரக்கூடியது தான். இந்த மாம்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கும் நிலையில் அதற்கான பதிலை இந்த கட்டுரை விளக்குகிறது.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
கோடை காலம் வந்து விட்டால் வெயில் மட்டும் இல்லை, மாம்பழ சீசனும் வந்து விட்டது என்றே அர்த்தம், சந்தைகளில் மாம்பழங்களின் விலை சரிந்து எளிதில் கிடைக்க கூட பழங்களில் ஒன்றாக மாறிவிடும்.
அத்துடன் சீசனில் விளையும் மாம்பழங்களின் சுவை தனிச் சுவையாக இருக்கும் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாம்பழங்களை சாப்பிட ஆசைப்படுவார்கள்.
இதற்கு மத்தியில் முக்கனிகளில் ஒன்றான இந்த மாம்பழத்தை நாம் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் ஒவ்வொரு சர்க்கரை நோயாளிகளுக்கும் வருவது இயற்கை தான்.
ஏனென்றால் மாம்பழத்தில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை இருப்பதால் (100 கிராம் மாம்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் 14 கிராம் சர்க்கரை) பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடாமல் இருப்பதே நல்லது என்று அறிவுரை வழங்குவார்கள்.
ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி மூலம் அறிவியலாளர்கள், நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை குறைந்த அளவில் உட்கொள்ளலாம் என கண்டறிந்துள்ளனர்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு மாம்பழ துண்டுகள் சாப்பிடுவது நல்லது என தெரிவித்துள்ளனர்.
இந்த மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான சர்க்கரையை உறிஞ்சிக் கொள்கிறது, எனவே சாப்பிட்ட பிறகு ஒன்று அல்லது இரண்டு துண்டு மாம்பழங்கள் சாப்பிடுவது ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவலாம் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவை குறைந்த கிளைசெமிக் சுமை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழம் என்றும் அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு சாப்பிட வேண்டும்
சர்க்கரை நோயாளிகள் முழுமையாக பழுத்த மாம்பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, கொஞ்சமாக பழுத்த மாம்பழங்களை சாப்பிடலாம், இவற்றில் சர்க்கரையின் அளவு குறைவாகவே காணப்படுகிறது.
தயிர், மீன், பன்னீர் போன்ற புரத மூலங்களுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதிகமாக மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும், அதே சமயம் மாம்பழ ஜூஸ் குடிக்கும் போது சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.
உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.