உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்கள்! ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்ற முதல் தமிழ் யூ-ட்யூப் சேனல்
'வில்லேஜ் குக்கிங் சேனல்' யூ-டியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்ற தென்னிந்தியாவின் முதல் யூ-ட்யூப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
அதற்கான அங்கீகாரமாக டைமண்ட் பட்டனையும் யூ-ட்யூப் நிறுவனம் இவர்களுக்கு அளித்துள்ளது. யூ-ட்யூபில் 1 கோடி (10 மில்லியன்) சப்ஸ்கிரைபரஸ் பெற்ற முதல் தமிழ் சேனல் இது தான், அதுவும் 3 வருடங்களில்.
இதையடுத்து யூ-ட்யூப் சேனலில் கிடைத்த வருமானத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்களம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், தமிழ்செல்வன், அய்யனார், முத்துமணிக்கம், சுப்பிரமணியன் மற்றும் பெரியதம்பி ஆகிய 6 பேர் கொண்ட குழுவாக இந்த சமையல் சேனலை நடத்துகின்றனர்.
முருகேசன் இந்த சேனலின் 'மாஸ்டர் மைண்ட்' மற்றும் பெரியதம்பி 'மாஸ்டர் குக்' என சொல்லலாம். யூடியூபில் மிகவும் பிரபலமான இந்த Village Cooking Channel ஏப்ரல் 2018-ல் தொடங்கப்பட்டது.
வியூவர்ஸ், சப்ஸ்கிரைபர் என்ற பெயரில் உலகம் முழுவதும் இவர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது, நெட்டிசன்கள் பலரும் இவர்களது மைல்கல் சாதனைக்கும், மனிதாபிமான உதவிக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரோடு கலந்துகொண்டு அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை சாப்பிட்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.