இளவரசி டயானா சிலையைக் காண நூற்றுக்கணக்கில் கூடிய மக்கள்: என்ன சொல்கிறார்கள்?
பிரித்தானிய இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்த நாளில் அவரது நினைவாக அவரது மகன்களான இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் அவரது உருவச் சிலை ஒன்றை கென்சிங்டன் மாளிகையில் நேற்று திறந்துவைத்தார்கள்.
மக்களின் இளவரசி என ழைக்கப்படும் டயானாவின் சிலை திறக்கப்பட்டதும், அதைக் காண்பதற்காக இன்று நூற்றுக்கணக்கில் மக்கள் கென்சிங்டன் மாளிகை முன்பு குவிந்தார்கள். எட்டு அடி உயரத்தில் நிற்கும் டயானாவின் அருகே, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் நிற்பது போல் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரம் முன்பே வாசலுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க, காலை 10 மணியளவில் சிலையைக் காண அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால், சிலையைப் பார்த்தபின் மக்கள் இரண்டு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர், டயானாவின் சிலை அழகாக இருக்கிறது என்று கூறியுள்ள நிலையில், வேறு சிலர் அது டயானா போல இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நேற்று சிலை திறக்கப்பட்டதுமே, அது முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரஸா மே போல உள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.