அதானி விவகாரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம் மற்றும் அதானி குழுமத்துக்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
"பாமக உறுப்பினர் ஜிகே மணி மட்டுமல்ல.. அவரது கட்சித் தலைவர்களும் அவரது கட்சியினரும் தொடர்ந்து இதுபற்றி வெளியில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதானியோடு முதலமைச்சருக்கு தொடர்பிருக்கிறது; அதானியை முதலமைச்சர் சந்தித்து பேசியிருக்கிறார் எனவும் பேசியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து, பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார். அதன் பிறகும் இதுபற்றி பேசப்பட்டு வருகிறது.
அதானி குழுமத்தின் முதலீடுகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசுகிறவர்களுக்கு நான் எழுப்பக் கூடிய கேள்வி என்னவெனில், அதானி மீது சொல்லப்பட்டிருக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும்; அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன.
திமுக மீது குறை சொல்லிக் கொன்டிருக்கக் கூடிய பாஜகவோ, பாமகவோ இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா? இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிப் பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?.
இப்போதும் சொல்கிறோம், அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை, நானும் அவரைப் பார்க்கவும் இல்லை. இதைவிட வேறு விளக்கம் வேண்டுமா? " என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |