மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த பிரித்தானியர்கள்: வெளிவரும் பகீர் தகவல்
பிரித்தானியாவில் வேறு நோய்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் புதிதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் ஒருபகுதியாக, வேறு உடல்நல பிரச்சனைகளால் மருத்துவ சிகிச்சையை நாடியுள்ள பிரித்தானியர்களில் 11,600 பேர்கள், மருத்துவமனையில் வைத்து கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவமனை சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது அடையாளம் காணப்படாத மிக ஆபத்தான ஒன்று என குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், தற்போது முதன்முறையாக அந்த எண்ணிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்கின்றனர்.
திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 11,688 பிரித்தானியர்கள் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை நாட்களில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக கண்டறிய்யப்பட்டுள்ளது.
பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனையில் மட்டும் இவ்வாறாக 484 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 18,000 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளனர்.
பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய மருத்துவமனை கூட்டமைப்பில் இதுவும் ஒன்று. இது இவ்வாறிருக்க, தற்போதும் தடுப்பூசி போட மறுக்கும் முன்களப்பணியாளர்கள் பணியில் நீடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கான காலக்கெடு நவம்பர் 11 உடன் முடிவடையும் என்பதால், பல ஆயிரம் பேர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றே கூறப்படுகிறது.
சுகாதாரத்துறையின் இந்த கடும்போக்கு நடவடிக்கை, பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முதியோர் காப்பகங்களில் பணியாற்றும் செவிலியர்கள் உட்பட 10 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் இதுவரை தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மொத்தம் 49,040 ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது, இந்த எண்ணிக்கையில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்டவர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் வேலையை விட்டு நீக்கப்படுவார்களா என்பது தொடர்பில் அடுத்த வாரம் உறுதியான தகவல் வெளிவரும் என்றே கூறப்படுகிறது.