பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து இறந்த பிரித்தானிய சிறுமி: விமான நிறுவனங்களுக்கு பெற்றோர் விடுத்த கோரிக்கை
பறக்கும் விமானத்தில் ஒவ்வாமை காரணமாக சுருண்டு விழுந்து மரணமடைந்த சிறுமியின் பெற்றோர் தற்போது விமான சேவை நிறுவனங்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பிரித்தானிய சிறுமி, 15 வயதான Natasha Ednan-Laperouse என்பவர் ஹீத்ரோவில் விமானம் ஏறும் முன் ப்ரீட்டில் ஒரு சாண்ட்விச் வாங்கியிருந்தார். அதில் பயன்படுத்தியிருந்த எள் விதைகள் அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக அவர் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதே நிலை, 14 வயது Poppy Jones என்பவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆன்டிகுவாவில் இருந்து கேட்விக் செல்லும் விமானத்தில், சக பயணி ஒருவர் வேர்க்கடலை சாப்பிட அதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவசர மருத்துவ சிகிச்சை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டார் பாப்பி ஜோன்ஸ்.
பாப்பி ஜோன்ஸ் தாயார் பல முறை அந்த சக பயணியை எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளாமல் வேர்க்கடலை சாப்பிடுவதை தொடர்ந்துள்ளார். இதனிடையே பாப்பி ஜோன்ஸ் மயக்கமடைந்து சரிந்துள்ளார்.
அவருக்கு இருமுறை EpiPen மருந்து அளிக்கப்பட்டுள்ளதுடன், ஆக்ஸிஜன் மாஸ்க் பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே, 8 மணி நேர பயணத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியதும், அவசர அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இதனால் சிறுமி பாப்பி ஜோன்ஸ் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த நிலையிலேயே Natasha Ednan-Laperouse-வின் பெற்றோர் தன்யா மற்றும் நாதிம் ஆகியோர் விமான சேவை நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் பிற விமான நிறுவனங்கள் விமானங்களில் வேர்க்கடலை உள்ளிட்ட ஒவ்வாமை ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகளுக்கு தடையை அமல்படுத்த முடியாவிட்டால், சட்டத்தை மாற்ற வேண்டும் என கோரியுள்ளனர்.