சுவிஸில் ஓடும் டிராம் வண்டியில் சடலமாக 6 மணி நேரம்: மகன் வெளியிட்ட பகீர் தகவல்
சுவிட்சர்லாந்தில் ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நபர் ஓடும் டிராம் வண்டியில் சடமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது மகன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சூரிச்சில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஓடும் டிராம் வண்டியில் 64 வயதான De Sando சடலமாக மீட்கப்பட்டார். தலை கவிழ்ந்த நிலையில் அவர் இருக்கையில் காணப்பட்டதால், அவர் இறந்தது, சக பயணிகள் எவருக்கும் தெரியாமல் போனது.
இதனால் 6 மணி நேரம் அவரது சடலம் அந்த டிராம் வண்டியில் பயணித்துள்ளது. இந்த நிலையில் அவரது மகன் நடந்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சூரிச் நகரில் ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றில் தையல்காரராக பணியாற்றி வந்துள்ளார் De Sando. ஆனால் சம்பவத்தன்று பகல் 8.30 மணி தாண்டிய பின்னரும் De Sando பணிக்கு திரும்பாதது, அங்குள்ள ஊழியர்களுக்கு வியப்பும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும் De Sando, ஒருமுறை கூட நேரம் தவறியதில்லை என்றே கூறப்படுகிறது. ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும் பீதியடைந்த அவரது மகன், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அவர்கள் De Sando தங்கியிருந்த குடியிருப்புக்கும் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்து விசாரித்துள்ளனர், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று மதியம் 1 மணியளவில் செவிலியர் ஒருவர் அந்த டிராம் வண்டியில் ஏற, அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே De Sando இறந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த செவிலியர் உடனடியாக டிராம் சாரதிக்கு தகவல் தெரிவிக்க, அவர் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனிடையே, De Sando-ன் மொபைலை சோதனையிட்டதில், மொத்தம் 40 தொலைபேசி அழைப்புகள் அவருக்கு இந்த 6 மணி நேரத்தில் வந்துள்ளது கண்டறியப்பட்டது.