உக்ரைனை எச்சரிக்கும் பிரித்தானியா... உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்குள் மாறுபட்ட கருத்து
உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்து உருவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz ஆகியோர், எப்படியாவது ஒரு அமைதி ஒப்பந்தம் உருவாகிவிடவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.
அவர்கள் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை பல விடயங்களை விட்டுக்கொடுத்தாவது சீக்கிரத்தில் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட நிர்ப்பந்திக்கலாம்.
அதனால், இவ்வளவு அராஜகமாக உக்ரைனுக்குள் ஊடுருவி, குழந்தைகள், பெண்கள் என்று கூட பார்க்காமல் பொதுமக்களைக் கொன்று குவித்த புடின், இப்போது அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்வது போல, போரை நிறுத்துவது போல காட்டிக்கொண்டு சில எளிய தடைகளுடன் போர்க்குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்பிவிடலாம்.
ஆனால், பிரித்தானியாவுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை பிரித்தானிய தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
நம் சக நாடுகள் சில ஜெலன்ஸ்கி எப்படியாவது அமைதியாகிவிடவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கூறியுள்ள பிரித்தானிய தரப்பு மூத்த அரசு அலுவலர் ஒருவர், உக்ரைன் தொடர்ந்து உறுதியாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
புடின் ஒரு பொய்யர், மற்றவர்களை வம்புக்கிழுப்பவர் என்று கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், புடின், சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்திக்கொள்வார் என உக்ரைனை எச்சரித்துள்ளார். ஆகவே, உக்ரைன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும் என பிரித்தானியா உக்ரைனை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், உக்ரைனின் முக்கிய பகுதிகளிலிருந்து ரஷ்யா தனது படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையும், ரஷ்யாவின் அமைதி பேச்சுவார்த்தையும், மீண்டு படைதிரட்டுவதற்கான நேரத்தை உருவாக்கிக்கொள்வதற்காக இருக்கலாம் என போரிஸ் ஜான்சனிடம் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.