முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரில் களம் காணும் இலங்கை அணி நட்சத்திர வீரர்! தகவல் உறுதியானதால் உற்சாகத்தில் ரசிகர்கள்
நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி-20 போட்டிகளில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் சண்டிமால் விளையாடவுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சண்டிமால் பைரஹவா கிளாடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எவரெஸ் பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை கிரித்பூரில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சண்டிமால் வெளியிட்ட செய்தியில், நேபாளத்தின் அழகிய நாட்டைப் பார்க்க மிகவும் ஆவளாகவுள்ளேன், கிளாடியேட்டர்களுடன் ஒரு சிறந்த எவரெஸ்ட் பிரீமியர் லீக் பருவத்தில் விளையாட நான் மிகவும் எதிர்பார்த்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சண்டிமால் 62 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 57 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கணிசமான சர்வதேச அனுபவத்தை கொண்டுள்ளார்.
2020 லங்கா பிரீமியர் லீக் தொடரில் சண்டிமால் எட்டு இன்னிங்ஸ்களிலிருந்து 41 சராசரியாகவும் கிட்டத்தட்ட 130 ஸ்ட்ரைக் ரேட்டில் 246 ஓட்டங்களை எடுத்தார்.
இப்படி கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த சண்டிமால் கணிசமாக எதிர்பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
எவரெஸ்ட் பிரீமியர் டி20 தொடரில் மற்றொரு இலங்கையரான புபுது தசநாயக்க, கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.