முடிவுக்கு வருகிறதா தமிழன் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வாழ்க்கை? நடராஜனும் அதிரடி நீக்கம்
ரஞ்சி கோப்பைக்கான தமிழக அணியில் இருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.சி.சி.ஐ. நடத்தும் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் திகதி தொடங்குகிறது. இதில் தமிழக அணி பி பிரிவில் கர்நாடகா, உ.பி. ரயில்வே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் கேப்டனாகவும், வாசிங்டன் சுந்தர் துணை கேப்டனாகவும் உள்ளனர். தமிழக அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், அணியின் அடையாளமாக விளங்கிய தினேஷ் கார்த்திக் இம்முறை ரஞ்சி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்திற்காக விளையாடிய வீரரின் பெயர் அணியில் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அருமையான பார்மில் உள்ள தினேஷ் கார்த்திக் ஏன் நீக்கப்பட்டார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதே போன்று தமிழக அணியின் வேகப்பந்துவீச்சாளரான நடராஜனும் அணியில் இடம்பெறவில்லை. நடராஜன் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பதால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் அணியில் சேர்க்கப்படாததன் மூலம் 36 வயதான தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.