ஓய்வு பெறுகிறாரா தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பதிவு
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் சமூக வலைதளப் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
Finisher தினேஷ் கார்த்திக்
அவுஸ்திரேலிய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் சிறந்த Finisher ஆக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.
ஆனால், அவர் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் சோபிக்க தவறினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவுடன் பதிவு அவர் ஓய்வு பெறுவாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் சிறப்பான தருணங்கள் கொண்ட வீடியோவாக அது உள்ளது.
நன்றி பதிவு
மேலும் அவரது பதிவில், 'டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தோம். அவ்வாறு விளையாடியது மிகவும் பெருமையான உணர்வு...இறுதி நோக்கத்தில் நாங்கள் தவறிவிட்டோம்.
ஆனால், அது என் வாழ்க்கையைப் போற்ற வேண்டிய பல நினைவுகளால் நிரம்பியது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் மிக முக்கியமாக ரசிகர்கள் என இடைவிடாத ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. கனவுகள் நனவாகும்' என தெரிவித்துள்ளார்.