ஆட்டநாயகனான தினேஷ் கார்த்திக்! ருத்ர தாண்டவ ஆட்டம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.
டிரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 24 ஓட்டங்களும், ஷ்ரேயஸ் ஐயர் ஓட்டங்கள் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பண்ட் (14), ஹர்திக் பாண்ட்யா (1) ஆகியோரும் வெளியேறினர்.
ஆனால், மறுமுனையில் ரோகித் சர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அதிரடியாக அரைசதம் அடித்த அவர், 44 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார். அவரது விக்கெட்டுக்கு பிறகு 16 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜடேஜா ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 138 ஆக இருந்தது. அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் குவித்தது.
PC: ICC/Twitter
தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் விளாசி, 19 பந்துகளில் 41 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். அஸ்வின் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 20 ஓட்டங்களும், கீமோ பவுல் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷிதீப் சிங், பிஸ்னோய் மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக 41 ஓட்டங்கள் விளாசிய இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ஆகத்து 1ஆம் திகதி, வார்னர் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.
PC: David Rogers/Getty Images