நல்லா இருக்கீங்களா! இங்கிலாந்து மண்ணில் ஒலித்த தமிழ்... ரசிகர்களிடம் தினேஷ் கார்த்திக் பேசிய சூப்பர் வீடியோ
இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களுடன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வர்ணனையாளராக சென்றிருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தனது கமெண்டரி மூலம் இணையத்தில் அடிக்கடி டிரெண்டாகி வருகிறார்.
Dinesh Karthik speaking tamil with Tamil fans from the balcony! ?? #WTCFinals #INDvNZ pic.twitter.com/D0pyd1cPYl
— Cricket lover(Msdian) (@criccrazylover) June 20, 2021
அந்த வகையில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது சக வர்ணனையாளர் நாசர் ஹுசைன், ஷார்ட் பந்தை அடிப்பதில் ரோஹித் ஷர்மா சிறந்தவர் என்றும், சூழலுக்கு ஏற்ற மாதிரி தனது கால்களை நன்றாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
உடனே, ‘ஆமாம் அப்படியே உங்களுக்கு நேர் எதிராக விளையாடுகிறார்’ என அவரை தினேஷ் கார்த்திக் கலாய்த்தார்.
அதேபோல், மைதானத்தில் ரசிகர்களிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த ரசிகர்கள் சிலர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை காண சவுத்தாம்ப்டன் மைதானத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது பால்கனியில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக்கைப் பார்த்த அவர்கள், ‘DK அண்ணா.. DK அண்ணா..’ என அழைத்தனர்.
இங்கிலாந்து மண்ணில் தமிழ் மொழியை கேட்டதும் உடனேயே திரும்பிப் பார்த்த தினேஷ் கார்த்திக், நல்லா இருக்கீங்களா, மழை வருது இங்க என்ன செய்றீங்க, வீட்டுக்கு போங்க என கூறினார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.