விஜயின் அரசியலுக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறிய அறிவுரை
தனது தகுதியை வளர்த்துக்கொண்டால் அரசியலில் தனக்கான இடத்தை விஜய் அடையலாம் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆர்.கே.செல்வமணி பேசியது
இந்நிலையில் தஞ்சாவூர் விநாயகர் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு விஜய் ஒரு விதிவிலக்கல்ல. சினிமாவை பொறுத்தவரை இயக்குநர்கள், நடிகர்கள் மீதுள்ள அபிமானத்தால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள் .
அதில் சினிமா நல்லா இருந்தால் ஹிட்டாகும். இல்லையென்றால் பிளாப் ஆகும். என்ன தான் பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் நல்லா இல்லையென்றால் பிளாப் தான்.
எல்லோரையும் விட அரசியலில் மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் சரியான முடிவு தான் எடுப்பார்கள். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது கொள்கை என்ன? போராட்டங்களை எப்படி எதிர்கொள்வார் என்பதை மக்கள் பார்ப்பார்கள்.
சினிமாவில் விஜயை நம்புவது போல அரசியலிலும் அவரை நம்புவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டால் அரசியலில் தனக்கான இடத்தை அடையலாம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |