பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் தனது 52வது வயதில் உயிரிழந்துள்ளார்.
மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைச் சுழி' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலச்சந்தர் என்ற தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குநர்களை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார்.
ஆனால் 'ரெட்டைச் சுழி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதன் பின் பல ஆண்டுகள் கழித்து சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் 'ஆண் தேவதை' என்கிற திரைப்படத்தை தாமிரா இயக்கியிருந்தார்.
இந்தப் படமும் சுமாரான வெற்றியே பெற்றது. இதை தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்திருந்த தாமிராவுக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தாமிராவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.