திடீரென்று மாயமான பிரித்தானிய தாயார்: ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு
மான்செஸ்டர் பகுதியில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான தாயார் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 அக்டோபர் மாதம் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 48 வயது கிறிஸ்டினா ரேக் திடீரென்று மாயமானார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் திகதி நாயுடன் நடக்கச் சென்றவர்கள், ஆற்றங்கரையில் மனித உடல் மிச்சங்களை காண நேர்ந்ததுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணை முன்னெடுத்த பொலிசார், இன்று அந்த உடலை அடையாளம் கண்டுள்ளனர். கிறிஸ்டினா ரேக் மாயமானதன் காரணம் தொடர்பில் அவரது சகோதரருக்கோ உறவினர்களுக்கோ எந்த தகவலும் தெரியவில்லை.
வாக்குவாதமோ, குடும்ப பிரச்சனையோ ஏதுமில்லை என்றே அவர் சகோதரர் மார்ட்டின் தெரிவித்துள்ளார். கிறிஸ்டினா ரேக் மாயமாவதற்கு முன்பு காணப்பட்டதாக தெரியவந்த பகுதியில் பொலிசார் தீவிரமாக தேடியும் எந்த தடயமும் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மன அழுத்தம் காரணமாக கிறிஸ்டினா ரேக் அவதிப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று அவர் உரிய மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.