கணவர் தன் பணத்தை திருடிவிட்டதாக வழக்கு தொடர்ந்த பிரித்தானிய பெண்: பிரான்ஸ் நீதிமன்றம் அளித்த ஏமாற்றம்
பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை மணந்து பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானிய பெண் ஒருவர், தன் கணவர் தன் பணத்தைத் திருடிவிட்டதாக வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால், நீதிமன்றம் அவருக்கு அளித்த தீர்ப்பு அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
திருமணம் தோல்வியடைந்ததால் நாடு திரும்பிய பிரித்தானிய பெண்
பிரித்தானியரான பட்ரீஷியா (Patricia Rolfe, 74), பிரான்ஸ் நாட்டவரான தனது கணவருடனான தனது திருமணம் தோல்வியடைந்ததால், 2016ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கே திரும்பிவிட்டார்.
ஆனாலும் தன் கணவருடன் அவ்வப்போது தொலைபேசி வாயிலாக தொடர்பில் இருந்ததால், தனது பிரான்ஸ் வங்கிக்கணக்கிலிருந்து இங்கிலாந்து வங்கிக்கணக்கிற்கு ஒரு சிறு தொகையை மாற்ற உதவுமாறு கோரியுள்ளார் பட்ரீஷியா. அதற்காக, தனது வங்கிக்கணக்கு விவரங்களை அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.
அதற்கு ஒரு காரணம், அவருக்கு பிரெஞ்சு மொழியில் அவ்வளவு புலமையில்லை. இன்னொரு விடயம், அவரது கணவர் வங்கியில் வேலை செய்கிறார். ஆகவே, வேலை எளிதாக முடிந்துவிடும் என்று நினைத்து கணவரின் உதவியைக் கோரியுள்ளார் பட்ரீஷியா.
பின்னர் தெரியவந்த உண்மை
பின்னர் பிரான்சிலுள்ள தங்கள் வீட்டை விற்றிருக்கிறார்கள் தம்பதியர். கிடைத்த தொகையை ஆளுக்குப் பாதியாக பிரித்துக்கொண்டிருக்கிறார்கள். பட்ரீஷியாவின் வங்கிக்கணக்கு விவரங்களை அவர் தனது கணவரிடம் கொடுத்திருந்ததால், அவர் பட்ரீஷியாவின் பணத்தை பதுகாப்பு கருதி கொஞ்சம் டொலராகவும், கொஞ்சம் யூரோ மற்றும் ஸ்டெர்லிங்காகவும் வங்கிக்கணக்கில் போடுவதாகக் கூறியுள்ளார்.
பிறகுதான் பட்ரீஷியாவுக்குத் தெரியவந்துள்ளது தனது பணத்தில் 30,000 யூரோக்களை கணவர் எடுத்துக்கொண்டுள்ளார் என்பது.
பட்ரீஷியா நீதிமன்றம் செல்ல, பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கணவன் அல்லது மனைவியின் பணத்தைத் திருடுவது சட்டப்படி குற்றமல்ல என தீர்ப்பு வழங்கப்படவே ஏமாற்றமடைந்துள்ளார் அவர்.
பிரச்சினை என்னவென்றால், பட்ரீஷியா இன்னமும் முறைப்படி அவரது கணவரை விவாகரத்து செய்யவில்லை. ஆகவே, பணத்தை இழந்தும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விரும்பவில்லை அவர். காரணம், இந்த வழக்கு முடிந்தால்தான் விவாகரத்து வழக்கு முடியும். இது முடியவே பல ஆண்டுகள் ஆகும் என்பதால், விவாகரத்து வழக்கு மேலும் தாமதமாகும் என்பதை அறிந்த பட்ரீஷியா இப்போதைக்கு அமைதியாகிவிட்டார்.
விவாகரத்துக்குப் பின் பணப்பிரச்சினைகளை சரி செய்துகொள்ளலாம் என்றாலும், தனது கதையைக் கூறி, பிரான்சில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என பிரித்தானிய பெண்களை எச்சரிக்க விரும்புகிறார் பட்ரீஷியா.