பிரான்சில் மாயமான இளம்பெண் ஹொட்டல் ஒன்றில் கண்டுபிடிப்பு... வெளியிட்டுள்ள அதிரவைக்கும் தகவல்
திங்கட்கிழமையன்று, வடமேற்கு பிரான்சில் ஜாகிங் சென்றபோது மாயமான 17 வயது பெண், மாயமான இடத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு ஹொட்டல் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஹொட்டல் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த அவர், நடுநடுங்கிப்போய் பதுங்கியிருந்த நிலையில், பொலிசார் அவரை மீட்டனர்.
திங்கட்கிழமை மாலை Mayenne என்ற இடத்தில் ஜாகிங் செய்துகொண்டிருந்த அந்த 17 வயது பெண் மாயமானார். அந்த பெண் வழக்கமான நேரத்திற்கு வீடு திரும்பாததால், அவரது தந்தை மகளைத் தேடிச்சென்றுள்ளார்.
அப்போது அவரது மொபைல் மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாட்ச் ஆகியவை மட்டும் ஓரிடத்தில் கிடப்பதை அவர் கண்டுள்ளார். அவற்றில் இரத்தம் இருப்பதைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை உடனடியாக பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்.
உடனடியாக, 200 பொலிசார், மோப்பநாய்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் உதவியுடன் நிலத்திலும், நதி ஒன்றிலும் தேடும் நடவடிக்கை துவக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாயன்று தன்னைக் கடத்திவைத்திருந்தவர்களின் வாகனத்திலிருந்து தப்பிய அந்த பெண் அருகிலிருந்த ஹொட்டல் ஒன்றிற்குள் நுழைந்து, பயந்து நடுங்கியவாறு அடைக்கலம் கேட்க, உடலில் இரத்தத்துடன் இருந்த அந்த பெண் மறைந்துகொள்ள அந்த ஹொட்டல் உரிமையாளர் உதவியிருக்கிறார். அப்போது அந்த பெண் கடும் அதிர்ச்சியிலிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அந்த பெண்ணை மீட்ட பொலிசார், அவளது உடலிலிருந்த காயங்களுக்கு சிகிசையளிப்பதற்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர் அவரது வீட்டில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
தன்னைக் கடத்தியவர்களை தன்னால் அடையாளம் காட்ட இயலவில்லை என அந்த பெண் கூறியுள்ள நிலையில், பொலிசார் CCTV கமெராக்கள் உதவியுடன் கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.