இந்தியரிடம் ஏழு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்த சுவிஸ் இளம்பெண்: கொலைக்கான காரணம் என சந்தேகம்
இந்தியா வந்த சுவிஸ்நாட்டு இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவருடைய பணப்பிரச்சினையே அவர் கொல்லப்பட காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சுவிஸ் இளம்பெண் படுகொலை
இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.
அவரை குர்பிரீத் சிங் (33) என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.
கொலைக்கான காரணம் என்ன?
குர்பிரீத் நினாவைக் காதலித்ததாகவும், நினா தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாகவும் குர்பிரீத் கூறியிருந்தார்.
பின்னர், நினா வேறொருவருடன் தொடர்பிலிருப்பது தெரியவந்ததால் அவரை இந்தியா வரவழைத்து குர்பிரீத் கொலை செய்ததாக மற்றொரு தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, குர்பிரீத்துக்கு நினா மீது காதல் எதுவும் இல்லை என்றும், அவரிடமிருந்து பணம் பறிக்கவே குர்பிரீத் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், உண்மையில் எதற்காக நினா கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்படாமலே உள்ளது.
பணம் எடுக்க முயன்ற நினா
இந்நிலையில், நினாவுக்கும் குர்பிரீத்துக்கும் இடையிலான மொபைல் chatகளிலிருந்து, பணப்பிரச்சினையே நினா கொல்லப்பட காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
நினா கொல்லப்படுவதற்கு முன், அவர் பல ATMகளுக்குச் சென்று பணம் எடுக்க முயன்றது தெரியவந்துள்ளது. ஒரு ATMக்கு குர்பிரீத்தும் நினாவுடன் சென்றுள்ளார்.
நினா சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு வைத்துள்ளதால், அவரால் இந்தியாவில் பணம் எடுக்கமுடியவில்லை. அத்துடன், தனது வங்கியிலிருந்து பெருந்தொகை ஒன்றை எடுக்கமுடியுமா என்பது குறித்து அறிய, நினா ஒரு வங்கி மேலாளரை அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஏழு லட்ச ரூபாய் கடன்
வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த குர்பிரீத், ரத்தினக்கற்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஐந்து வருடங்களாக அவர் நினாவுடன் பழகி வரும் நிலையில், நினாவுக்கு ரத்தினக்கற்கள் கொடுத்துள்ளதுடன், நினாவின் பிரச்சினைகளைத் தீர்க்க சுவிட்சர்லாந்தில் அவருக்காக பூஜைகளும் செய்துள்ளார்.
நினா, குர்பிரீத்திடம் ஏழு லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு குர்பிரீத் நினாவைக் கேட்டுள்ளார். அதற்காக, இந்தியாவுக்கு வருமாறு நினாவை குர்பிரீத் கட்டாயப்படுத்தியதையும் மொபைல் chatகளிலிருந்து அறியமுடிகிறது.
ATMகளில் பணம் எடுக்கமுடியாததால் நினாவை இன்னொரு பூஜை செய்யலாம் என அழைத்துச் சென்ற குர்பிரீத், அவரது கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டி, பூட்டுப் போட்டு, ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைக்க, நினா மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.
குர்பிரீத் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வீட்டிலிருந்து துப்பாக்கி முதலான ஆயுதங்கள் கிடைத்துள்ளதால், மீண்டும் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |