இலங்கை ஜனாதிபதி தேர்தல்... பெருவாரியான வாக்குகள் பெற்று முந்தும் அநுர
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமடைந்துவரும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ரணில் மூன்றாமிடம்
இதுவரையான வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 49.77 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 25.78 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சனிக்கிழமை நடந்த தேர்தல் வாக்குப்பதிவில், வாக்களிக்க தகுதியான 17 மில்லியன் மக்களில் சுமார் 75 சதவிகிதம் பேர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
55 வயதான அநுர குமார திஸாநாயக்க, கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் பற்றிய அவரது வாக்குறுதிகளால் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என்றே கூறப்படுகிறது.
மேலும், பொதுத் தேர்தலில் தனது கொள்கைகளுக்கு புதிய ஆதரவைப் பெறும் நோக்கிக்கில், ஆட்சிக்கு வந்த 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக உறுதியளித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக அநுர
2022ல் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொருளாதாரம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டதன் பின்னர் முன்னெடுக்கப்படும் இலங்கையின் முதல் தேர்தல் இதுவாகும்.
பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், மருந்து, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிக்கு வருவார் என்றே முடிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |