டயானாவுக்கு இழைத்த துரோகம் முதல் இனவெறி கருத்துக்கள் வரை.. மன்னர் மூன்றாம் சார்லஸ் எதிர்கொண்ட 5 முக்கிய சர்ச்சைகள்
மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக ஆனார்.
ஆனால் அவர் இளவரசராக கடந்த காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
செப்டம்பர் 8, வியாழனன்று ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் இறந்த பிறகு, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். 73 வயதில் இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்ற மன்னர் சார்லஸ், கடந்த காலங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் அரச குடும்பத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினர்களில் ஒருவராகவ் இருந்துள்ளார்.
பல ஆண்டுகளாக மன்னர் மூன்றாம் சார்லஸ் எதிர்கொண்ட சில முக்கிய சர்ச்சைகளை இங்கே பார்க்கலாம்
1. இனவெறிக் கருத்துக்கள்
ஓப்ரா வின்ஃப்ரேயின் மிகவும் பிரபலமான நேர்காணல் ஒன்றில், இளவரசர் ஹா மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் யாரையும் பெயரிடாமல், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இனவெறி தாக்குதலை எதிர்கொண்டதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை என்றாலும், குற்றச்சாட்டுகள் ஹரியின் தந்தை சார்லஸையே சுட்டிக்காட்டப்பட்டதாக ஆதாரங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அரச குடும்பத்தின் தரப்பிலோ, சார்லஸின் தரப்பிலோ எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
2. முதல் திருமணத்தில் துரோகம்
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியின் போது, இளவரசர் சார்லஸ் தனது மனைவி இளவரசி டயானாவுக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டார். டயானாவுடனான திருமண வாழ்க்கை முறிந்து போன பிறகு, தான் வேறு ஒருவருடன் உறவில் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
3. இளவரசி டயானாவின் துயர மரணம்
ஒரு பயங்கரமான கார் விபத்தில் இளவரசி டயானாவின் அகால மரணமடைந்த பிறகு, பிரித்தானிய அரச குடும்பம், இளவரசர் சார்லஸுடன் சேர்ந்து, விபத்துக்கு தாமதமாக பதிலளித்ததற்காகவும், பக்கிங்ஹாம் அரண்மனையின் மீது கொடியை தாழ்த்தாததற்காகவும் குற்றசாட்டுகளை எதிர்கொண்டனர்.
4. இளவரசி டயானாவின் பிரபலத்தைக் கண்டு 'பொறாமை'
இளவரசி டயானாவின் 25-வது ஆண்டு நினைவு நாளில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் காணப்பட்ட பல்வேறு காப்பகக் காட்சிகள் மூலம், டயானாவின் பெரும் புகழ் குறித்து சார்லஸ் பொறாமை கொண்டதாக அறியப்பட்டது. இது பெரும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.
5. மன்னர் மூன்றாம் சார்லஸ் சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள்
ஆறு வீடுகள், பல சொகுசு கார்கள் என பல ஆண்டுகளாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது ஆடம்பரமான செலவினங்களுக்காக நிறைய விமர்சனங்களை பெற்றுள்ளார். அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து நன்கொடை பெற்றதாக கூறப்படும் ஊழலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.