போட்டி தொடங்கும் முன்னே பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம் - தேசிய கீதத்திற்கு பதிலாக ஒலித்த ஜிலேபி பேபி
இந்தியாவிற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தானின் தேசிய கீதம் தவறாக ஒலிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
2025 ஆசிய கோப்பையின் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடு உருவானதில் இருந்தே எதிரி நாடுகளாக இருந்து வரும் சூழலில், சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தான் உடன் விளையாட கூடாது என இந்திய அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், பன்னாட்டு தொடர் என்பதால், இந்தியா விளையாட ஒப்புக்கொண்டது.
வழக்கமாக கிரிக்கெட் போட்டியில், இரு அணி வீரர்களும் சகஜமாக பேசி கொள்வது, போட்டி முடிந்த பின்னர் கை குலுக்கி கொள்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
ஆனால், நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தது கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அணி நிர்வாகம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்தியா மீது புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம்
இதே போல் போட்டி தொடங்கும் முன்னதாகவே, பாகிஸ்தானுக்கு அவமான சம்பவம் ஒன்று மைதானத்தில் நிகழ்ந்துள்ளது.
நாணய சுழற்சிக்கு பின்னர், இரு அணி வீரர்களும் தேசிய கீதம் ஒலிக்கப்படும் போது அணிவகுத்து நின்றனர்.
பாகிஸ்தான் அணியின் தேசிய ஒலிக்கப்படும் போது, அதன் தேசிய கீதத்திற்கு பதிலாக ஜிலேபி பேபி (jalebi baby) என்ற பாடல் 6 விநாடிகளுக்கு ஒலிக்கப்பட்டுள்ளது.
DJ played Jalebi Baby song on Pakistan National anthem 🤣#INDvsPAK #BoycottINDvPAK pic.twitter.com/rJBmfvqedI
— 𝗩 𝗔 𝗥 𝗗 𝗛 𝗔 𝗡 (@ImHvardhan21) September 14, 2025
தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த மார்பில் கை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர், உடனடியாக பாடல் மாற்றப்பட்டு பாகிஸ்தானின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
இந்த ஜிலேபி பேபி பாடல் இந்திய வம்சாவளி கனேடிய பாடகரான டெஷர்(tesher) என அழைக்கப்படும் ஹிதேஷ் சர்மா என்பவரால் 2021 ஆம் ஆண்டில் பாடப்பட்டது. இந்த பாடல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாடகர் டெஷர், "ஜிலேபி பேபி ஒரு கீதம் என்பது எனக்கு தெரியும். ஆனால், இதனை நான் எதிர்பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான போட்டியில், அவுஸ்திரேலியா தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் தவறுதலாக ஒலிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |