விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது தேமுதிக
அதிமுக-வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜுன் 14 ஆம் திகதி தொடங்கி ஜூன் 21 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தது.
மேலும் ஜூலை 13ஆ திகதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.
இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது.
காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றைய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை.
எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.
இன்றைய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர்.
எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அன்னியூர் சிவாவும், பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.