தமிழக எம்.பிக்கள் கூட்டம் - முதல்வர் விஜய் அழைப்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கின்றன.
தமிழக எம்.பிக்கள் கூட்டம்
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
திமுக எதிர்ப்பு
இந்த கூட்டத்தை அரசியல் நாடகம் என விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, இந்த கூட்டத்தை திமுக எம்.பிக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?
CauveryIssueக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
#DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் #FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு.@mkstalin தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 8, 2026
இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு…
உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் MPக்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
அதிமுகவும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல், நாடாளுமன்ற தொடர் இருப்பதால் தேமுதிக மாநிலங்களவை எம்பி சுதீஷ் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்துள்ளார்.
இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் எம்பி அமெரிக்காவில் உள்ளதால் அவரால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் திமுக அதிமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |