கூடுதல் தொகுதி வழங்க மறுக்கும் திமுக - புதிதாக கூட்டணியில் இணையும் 2 கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் திகதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற விடயங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
கூடுதல் தொகுதி வழங்க மறுக்கும் திமுக
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலுக்கு பின்னர் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேவேளையில், தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் பாஜகவின் வாக்கு வங்கி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை விட அதிகரித்துள்ளது.
இதனால் கட்சியை வளர்க்கும் விதமாக, கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் ஆட்சியில் பங்கும் வழங்க முடியாது, கூடுதல் தொகுதிகளையும் வழங்க முடியாது என்பதில் உறுதியாக உள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும் கவலை இல்லை என்ற மனநிலையில் உள்ளது.
புதிதாக வரும் 2 கட்சிகள்
காங்கிரஸ் விலகுவதால் பறிபோகும் வாக்குகளை, தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்த்து ஈடுகட்டலாம் என்ற திட்டத்தில் உள்ளது.

திமுக கூட்டணியில், வெகு விரைவில் புதிய கட்சிகள் இணையும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தேமுதிக உடன் தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ள நிலையில் விரைவில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேமுதிக உடனான பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர், ராமதாஸ் உடன் கூட்டணி குறித்து பேசலாம் என ராமதாசிடம் ஸ்டாலின் போனில் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |